Thursday, January 20, 2011

ஊமை ராகம்.

அன்று மாலைப்பொழுது மனதை கவரும் கடற்கரை மணலில் தன்னை மறந்து இயற்கையை ரசித்திருந்தான் ஆகாஷ். அந்த கடலின் அலைகளுக்கே ஜதியாக ஓர் கொலுசின் ஓசை அவனின் ரசனையை சற்றே கலைத்தது. அவன் ரசித்த இயற்கையை விட ஓர் அற்புதமான படைப்பாக இருந்த அந்த ரோஜவைப் பார்த்து சலனடையாமல் அவனால் இருக்க முடியவில்லை. சுற்றிலும் ரோஜாக்கள் மத்தியில் மலர்களின் ராணியாக மெல்ல நடந்து வந்தாள் ஸ்ருதி.


கரையை காதல் செய்துகொண்டிருந்த அலைகள் கூட அவளின் பாதங்ளை முத்தமிடுவதற்காக வேகமாக வந்து கொண்டிருந்தது. அவளும் அவற்றின் ஆசைக்கு இணங்கியவளாக தன் கால்களை நனைத்து அலைக்கு சுதி சேர்த்துக் கொண்டிருந்தாள். முத்தமிட்டு மட்டும் செல்ல மனமின்றி அவளை சீண்டி பார்க்க ஆசை கொண்ட கடலலை அவளை அள்ளிச் செல்ல முடியாது அவள் கால் கொலுசுகளை அள்ளிச் சென்றது. அத்தனை நேரம் மலர்ந்திருந்த அந்த ரோஜா மலர் வண்டு அமா்ந்த மலர் போன்று உதிர்ந்தது. கன்னியவள் கண்களில் கண்ணீர்த்துளிகள் பனித்தது. சுற்றியிருந்த தோழியரின் ஆறுதல் மொழி கூட அவளை ஆற்றுப்படுத்த வில்லை. அது அவர்கள் குடும்பத்தின் பரம்பரை முதுசொம். தொலைந்ததை எண்ணி துடித்துக்கொண்டிருந்தாள்.


கண்ட மாத்திரத்தில் மனதை பறிகொடுத்த காளையவனுக்கு கன்னியவளின் கலங்கிய கண்களை பார்க்க மனசு பொறுக்கவில்லை. அந்த கடலுக்குள் இந்த சிப்பியின் முத்தான கொலுசை தேடி சுழியோட ஆரம்பித்தான். அவன் முயற்சி வெற்றியும் கண்டது. அவன் எடுத்தது அவளின் முத்தான கொலுசு மட்டுமல்ல சிப்பியான அவள் உள்ளத்தில் முத்தான அன்பும் கூட தான். தொலைந்த அவள் சிரிப்பை மீண்டும் அவளின் வதனத்தில் கண்ட அவனிற்கு மகிழ்ச்சியோ தாங்க முடியவில்லை. அவளிற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை அவனிற்கு நன்றி சொல்ல. இருந்தும் நன்றி சொன்னாள் இன்முகத்துடன்!


காலம் அவர்களை எதிர்பாராமல் பல முறை சந்திக்க வைத்தது. சந்திப்பின் பிரதிபலன் இருவர் மனதிலும் இனிமையான காதல் மலர்ந்தது. அது வரை பொறுத்திருந்தவன் அந்த பெப்ரவரி 14ல் அந்த ரோஜாவைத் தேடி ரோஜாவுடன் சென்றான். அப்போது தான் அவனிற்கு புரிந்தது தான் காதலித்தது அவளை. அவளோ காதலித்தது அவனின் நட்பை என்று. அன்றோடு அவள் வைத்தாள் அவர்களின் நட்பிற்கு முற்றுப்புள்ளி. புரிந்து பழகியவன் அவளை புரியாமல் போனாதால் அவர்கள் உறவுக்கு வந்தது முற்றுப்புள்ளி. மனங்களில் அன்பு மட்டும் அசைக்க முடியாமல் இருந்தது. காலச் சக்கரம் விரைவாகவே சென்றது. வருடமும் ஒன்றை கடந்தது. ஆனால் அவர்கள் மனங்களில் மட்டும் மாற்றங்கள் வரவில்லை.


அன்று அவள் பூவே பூக்களை சூடிய பூந்தோட்டமாய் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றாள். அந்த பூவின் இதழ்களை ஒடிப்பதில் காலனிற்கு ஏன் தான் அவசரமோ…..! எங்கிருந்தோ வந்த மோட்டார் வண்டி அவளை எட்டி உதைத்துவிட்டு அவ்விடத்தை விட்டகன்றது. அந்த இடத்திலேயே துடிதுடித்து விழுந்தாள். அடுத்த நொடியே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டாள். அவளுக்கான இரத்தம் அந்த வைத்தியசாலையில் இல்லாததால் அனைவரும் அவளின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க மறுத்தனர். விதி அவளை கொண்டு செல்ல விரும்பவில்லை. ஆகாஷ் ரூபத்தில் அவள் முன் வந்தது. இரத்தங்கள் பரிமாறப்பட்டு இவளும் உயிர் பிழைத்தாள். அன்றி லிருந்து ஆகாஷ் அவர்கள் வீட்டு செல்ல பிள்ளையானான். இப்படியே குடும்ப நட்பு இனிமையாய் தொடா்ந்தது.


காத்திருந்து களைத்த அவன் மறுபடி மனுக்கொடுத்தான் தன் காதல் தேர்தலுக்கு. அத்தோடு ஓர் விண்ணப்பத்தை அதிகமாகவே கூறினான். இப்போ எம் உயிர் ஒன்று. என் இதயத்தின் ஆசைகளின் உயிரோட்டமான உதிரமே உன் உடலில் ஓடுகின்றது. இன்று கூட உன்னால் என்னை புரிய முடியவில்லையா என்று. மறுப்புக்கள் கூறினாலும் அவள் மனதும் சற்றே சலனம் கண்டது. அவனின் அன்பில் நெகிழ்ந்தவள் இன்னும் இரண்டு நாட்களில் தன் காதலை அனிடம் சொல்ல காத்திருந்தாள். ஆம் அந்த நாள் தான் காதலர் தினம். அவனின் ஆசைப்படி காலையில் கோவில் சென்றவள் அங்கு தன் காதலை அவனிடம் கூறினாள். அளவில்லா ஆனந்தத்தில் பூரித்த அவனுக்கு அன்புக் கட்டளை போடவும் தயங்கவில்லை. நம் காதல் நமக்குள்ளே இருக்கட்டும். இருவரும் வாழ்வில் உயர்ந்த பின் மற்றவர்களுடன் பரிமாற முடிவெடுத்தனர். அது இருவருக்கும் சரியாக தோன்றவே உள்ளத்தால் காதலராயும் தோற்றத்தால் நண்பர்களாயும் வாழ முடிவெடுத்தனர். அவனிடம் இருந்து அன்பாக விடை பெற்று சென்றாள்.


அன்று அவள் நண்பியின் வீட்டில் கொண்டாட்டம். அதனால் அவளிற்கு அங்கு மதிய உணவு. எல்லா உறவுகளுடனும் அன்பாக உண்டு மகிழ்ந்திருந்தாள். விழா முடித்து சென்றவளுக்கு விதியும் முடிந்து செல்ல போகிறது என்று அக்கணம் விடைபெற்ற யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அன்றைய உணவு அவளிற்கு காலனாகிவிட்டது. அவளிற்கே ஆகாத இறைச்சி அவள் வாழ்க்கையை பதம் பார்த்தது. காலம் அவர்களை விட்டு வைக்கவில்லை. வீட்டிற்கு சென்றவள் சில நொடிகளில் மயங்கினாள். மறுநொடியே எல்லோரிடமும் இருந்து நிரந்தரமாக விடை பெற்றாள்.


காதலை சொன்னவள் காதலர் தினத்திலே காலனால் பறிக்கப்பட்டாள். தம் உறவைக் கூட வெளியில் சொல்ல முடியாதவனாய் ஊமையாய் அழுதான் ஆகாஷ். அவனின் கண்ணீருக்கான காரணம் அவனுக்கு மட்டுமே புரிந்திருந்தது. அவனை புரிந்தவள் புரிந்த மாத்திரத்திலேயே அவனை பிரிந்து சென்று விட்டாள். இதை விட அவள் அவனை புரியாமலே இருந்து இருக்கலாம்……! அவன் வாழ்வில் காதலர் தினமோ அவன் காதலியை பறிகொடுத்த தினம்! இப்படி உறவு சொல்ல முடியா ஊமைகளாய் எத்தனையோ உறவுகள் ஒவ்வோர் மூலையில் ஊமை ராகமாய் மீட்டிக்கொண்டிருக்கின்றது

2 comments: